கால்நடை மருத்துவ ஊர்தி சேவை: அமைச்சர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையினை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடைகளுக்கு மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நோக்கில் 06 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையினை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, அமைச்சர் பேசும் போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடவும் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக, தொலைதூர கிராமங்களில் கால்நடைகளுக்கு மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் 245 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில், 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை வாகனம் என்ற அடிப்படையில் 06 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை வாகனங்கள் (1962) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை வாகனங்கள் நமது மாவட்டத்திற்கு வரவுள்ளது. இந்த சிகிச்சை ஊர்தி வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதுடன், குறிப்பாக தொலைதூர கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை மருத்துவப் பணியாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் கொண்ட குழுவினர் பணியில் இருப்பார்கள். மேற்படி குழுவினர் அடங்கிய நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் அனைத்து மருத்துவ பரிசோதனைகள் அதாவது, சிகிச்சைகள், தடுப்பூசிப் பணிகள், செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, சினையுறா பசுக்களுக்கான சிறப்பு சிகிச்சைகள், சிறிய அறுவை சிகிச்சைகள் மற்றும் விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.