விருத்தாசலம் பகுதி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
இரண்டாம் படை வீடு ஆழத்து விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருத்தாசலம் பகுதி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளது ஆழத்து விநாயகர் கோவில். முருகனுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. இதில் ஆழத்து விநாயகர் இரண்டாம் படை வீடாக போற்றப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆழத்து விநாயகருக்கு நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனைகள் நடந்தது. மாலையில் விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாளிக்க மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு பிடித்த அவல், சர்க்கரைப் பொங்கல், பொறி பொட்டுக்கடலை, லட்டு, கரும்பு, கொழுக்கட்டை உள்ளிட்ட நைவேத்தியங்களை வைத்து வழிபட்டனர். இதேபோல விருத்தாசலம் வானொலி திடல் அருகில் மணிமுத்தாற்றங்கரையில் 15 அடி உயரமுள்ள சித்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தீர்த்த மண்டப தெரு பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது இதில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் செய்து கண் திறக்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனைகள் நடந்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிறப்பு பூஜைகளும் வருகின்ற 9 ந் தேதி விநாயகர் வீதி உலாவுடன் நீர் நிலையில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேபோல விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருத்தாச்சலம் மங்கலம்பேட்டை ஆலடி கம்மாபுரம் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் அந்தந்த பகுதிகளில் விழா குழுவினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது.