மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் முற்றுகை
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியான நச்சலூர் கடைமடை பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள் போதிய அளவு தண்ணீர் செல்லாததால் நாற்று விட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி குளித்தலை ஒன்றிய குழு சார்பில் விவசாயிகள் இன்று காலை குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி செயற் பொறியாளர் கோபிகிருஷ்ணன், உதவி பொறியாளர் பத்மாதேவி, குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சு வார்த்தையில் வரும் 15 ஆம் தேதிக்குள் போதிய அளவு தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.