விருத்தாசலம் ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடந்த ஒன்றை வருடமாக ஒன்றிய பொது நிதியை ஒதுக்காத தமிழக அரசை கண்டித்து நடந்தது

Update: 2024-09-18 09:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம், செப்.19-  விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மலர் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கோதை, வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் வரவேற்றார். அப்போது கவுன்சிலர்கள் பேசியதாவது:-  அய்யாசாமி (சுயேட்சை) வீடுகள் கட்டும் திட்டத்தில் நாங்கள் கூறுபவர்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை. கவுன்சிலர்களான எங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றே தெரியவில்லை. ஊராட்சி மன்ற தலைவரிடம வீடுகள் ஒதுக்கி தருகிறீர்கள். நாங்கள் கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெளியேற வழி இல்லை. அதனால் மக்கள் ஒன்றிய அலுவலகத்தில் வந்து நிற்கிறார்கள். மேலாளர் சீத்தாபதி:- அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் வீடுகள் ஒதுக்கப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த உடன் தண்ணீர் வெளியேற வழிவகை செய்து தரப்படும். செந்தில்குமார் (சுயேட்சை) க. இளமங்கலம், சாத்துக்குடல் கிராம பகுதிக்கு மயானம் அப்பகுதியில் உள்ள ஏரியில் ஏரியில் அமைந்துள்ளது. ஆனால் மழைக்காலங்களில் மயானத்திற்கு பிரேதங்களை கொண்டு செல்ல பாதை வசதி இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இப்ராகிம் (வட்டார வளர்ச்சி அலுவலர் ):- நடவடிக்கை எடுக்கப்படும். சரவணன் (பாமக):- கடந்த 18 மாதங்களாக கவுன்சிலர்களுக்கு நிதி வழங்காமல் இருப்பதால் அடிப்படை வசதிகளை கூட எங்களால் செய்து தர முடியவில்லை. அதனால் நிதியை எப்பொழுது ஒதுக்கி தருவோம் என கூறினால் தான் நாங்கள் தீர்மானத்தில் கையெழுத்திடுவோம். அதுவரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். செல்வராசு (பாமக):- எங்கள் பணியை சிறப்பாக செய்ய நிதியை ஒதுக்க வேண்டும். மக்கள் கோரிக்கைகளை அப்பொழுதுதான் நிறைவேற்ற முடியும். விருத்தாச்சலத்திற்கு மட்டும் இந்த நிலையா என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். புதுக்கூரைப்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் :-  தமிழகம் முழுவதுமே ஒன்றிய பொது நிதி ஒதுக்கவில்லை. அனைத்து ஒன்றியங்களிலும் இந்த நிலைதான் நிலவி வருகிறது. கவுன்சிலரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஆனந்த கண்ணன் (சுயேட்சை):- காட்டுப்பரூர் பழைய ஊராட்சி கட்டிடம் பயன்பாடு இன்றி உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? சிறுவம்பார் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சாலையை செப்பனிட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஒன்றாவது வார்டு பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். ஒன்றிய பொது நிதி ஒதுக்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று உரிய பதிலும் கூறவில்லை. இதனை கண்டித்து நாங்கள் போராட்டம் செய்யலாமா? மேலாளர் சீத்தாபதி:- போராட்டம் செய்ய நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும். தமிழகம் முழுவதும் இந்த நிலைதான் நிலவி வருகிறது. அரசு நிதியை விடுவிக்கவில்லை. ஆனந்த கண்ணன் :- எங்கள் பதவி முடிய மூன்று மாதங்களே உள்ளது. அதற்குள் மக்கள் எங்களிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கு நிதியை விடுவிக்க என்ன செய்ய வேண்டும். மேலாளர் சீத்தாபதி:- தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்க வேண்டும். நாங்கள் கடிதம் மூலமாக தெரிவிப்போம். ரோஸி மணிகண்டன் (பாஜக):- ஒவ்வொரு முறை கூட்டத்தின் போதும் இப்படித்தான் கூறி எங்களிடம் கையெழுத்து பெற்று விடுகிறீர்கள். ஆனால் இதுவரை நிதி வந்த பாடில்லை. செந்தில்குமார்:- இப்படியே பேசிக் கொண்டிருந்தால் நிதி வராது. அதனால் நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என தெரிவித்தார். அப்போது ஒன்றிய குழு துணைத் தலைவரான பாமக கவுன்சிலர் பூங்கோதை, சரவணன், பாக்யராஜ், செல்வராசு, சுயேட்சை கவுன்சிலர்களான செந்தில்குமார், ஆனந்த் கண்ணன், அய்யாசாமி, தேமுதிக நீலாவதி, அதிமுக தனக்கோடி, பாஜக ரோசி ஆகிய பத்து கவுன்சிலர்களும் கவுன்சிலர்கள் கூட்டம் அரங்கத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய குழு தலைவர் மலர், வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராகிம் ஆகியோர் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசிடம் இருந்து நிதியை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்ற கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு, நிதி ஒதுக்கும் வரை தீர்மான பதிவேட்டில் கையெழுத்திட மாட்டோம் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News