வீதியில் நின்று யூடியூபர் ஜி.பி.முத்து வாக்குவாதம் : வீடியோ வைரல்
உடன்குடியில், வீதியில் நின்று யூடியூபர் ஜி.பி.முத்து வாக்குவாதம் செய்தது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை யூடியூபர் ஜி.பி.முத்து குடும்பத்தினர் நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் புரட்டாசி மாத பிறப்பையொட்டி கோவிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை வைப்பதற்காக வந்தனர். அப்போது அங்கு வந்த ஜி.பி.முத்து, மகேசை இந்த கோவிலுக்கு இனி நீ பூஜை வைக்கக்கூடாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது மகேஷ் தரப்புக்கும், ஜி.பி.முத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜி.பி.முத்து தகாத வார்த்தைகளால் வீதியில் நின்று பேசியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்தவர்களில் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசில் மகேஷ் தரப்பினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.