அரேபிய மண் கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வு!
பட்டிணமருதூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட புள்ளியில்லாத எழுத்துக்களை கொண்ட அரேபிய மண் கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஸ் செல்வரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
தொல்லியல் ஆர்வலர் ராஜேஸ் செல்வரதி, தனது கீழபட்டிணம் குறித்த ஆய்வின் ஒரு கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பட்டிணமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள மிக மிக தொன்மையான ‘சேக் அப்துல் காதர் (எ) சேக்கரி வாப்பா தர்ஹாவில்’ 11.09.2024 அன்று மேற்கொண்ட கள ஆய்வின் போது தான் சில கல்வெட்டுக்களை கண்டறிந்ததாகவும் அது சமயம் அங்கு திருவிழா நடைபெற்றதால் மேற்கொண்டு தெளிவாக கள ஆய்வு செய்ய இயலாமல் திரும்பியதாகவும், இந்த தர்ஹாவினை பட்டிணமருதூரினை பூர்வீகமாக கொண்டு தற்போது தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய குடும்பத்தினர்தான் இந்த தர்ஹாவினை சமீபத்தில் புணரமைப்பு செய்து வழிபட்டு வருகின்றனர் என்றும், புணரமைப்பின் போது சுமார் 4-5 அடி ஆழத்தில் மேலும் இரண்டு கல்வெட்டுக்கள் கிடைத்ததாகவும், இங்குள்ள 5 பிரகாரங்களில் முதன்மையாக உள்ளவர் சேக்கரி வாப்பா (ஒலிவுல்லா) ஆவார் என்றும், மற்றவர்கள் முறையே அவரது தந்தை சேவுத் அலி, அவரது தாய் சாரா பீவீ, அவரது சகோதரர் முகம்மது அலி மற்றும் அவரது சகோதரி மரியா பீவீ என்பவர்கள் என்றும் தகவல் தெரிவித்தார். மேலும் சேக்கரி வாப்பாவின் 11.09.2024 அன்றைய அருள் வாக்கின்படி அவரின் வருகையின் காலகட்டம் அல்- ஹிஜ்ரி 63(பொ.ஊ 685) என்றும், அவருடன் வந்த 14பேரில் மூவர்கள்தான் முறையே ஆத்தாங்கரை பள்ளியி (திசையன்விளை), காசிமஸ்தான் பள்ளி(நவ்வலடி) மற்றும் சென்னை-கோவளம் தர்ஹாவிலும் புனிதர்களாகியுள்ளதாகவும் தகவல் அளித்தார் என்றும், அன்னாரின் கருத்து தனது பொ.ஊ.8ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த கீழ்பட்டிணம் பகுதிதான் இஸ்லாமியர்களுக்கு வணிகத்திற்காக ஒதுக்கப்பட்ட முதல் நகரம் என்ற கருத்துக்கு வழு சேர்ப்பதாக அமைந்ததாகவும், எனவே தான் அந்த இஸ்லாமிய பக்தர்களின் துணையோடு 18.09.2024 அன்று அங்கு காணப்படும் 5 கல்வெட்டுக்களையும் தண்ணீரால் சுத்தப்படுத்தி புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தி கொண்டதாகவும், எழுத்துக்கள் மிகவும் தொன்மையான புள்ளியில்லாத வடிவமுறையில் உள்ளதால் முறையாக ஆய்வாளர்களின் துணையோடு அதனை படித்து பின் அதன் விபரங்களை பதிவிடுவதாகவும் தனது வரலாற்று கண்டறிதலை பதிவு செய்தார். இத்தகைய வரலாற்று தொன்மங்கள் குவிந்து காணப்படும், ஏற்கனவே இந்திய தொல்லியல்துறை 3 கட்ட கள ஆய்வுகளை மேற்கொண்ட இந்த பகுதிகளை உடனடியாக தொல்லியல் ஆய்வுக்குட்பட்ட பகுதிகளாக அறிவித்து முறையாக ஆய்வுகள் செய்து தொன்மைகளை பாதுகாத்திட வேண்டும் இந்த பகுதி மக்களின் சார்பாக தொல்லியல் ஆர்வலர் என்கின்ற முறையில் தனது கோரிக்கைகளை பதிவு செய்தார்…