ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை தடையை நீக்க வேண்டும்: தீர்மானம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடையை காவல்துறை நீக்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2024-09-22 03:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களான தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, ஹெச்எம்எஸ் சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் செப்-19 அன்று ஐஎன்டியுசி அகில இந்திய அமைப்பு செயலாளர் பி.கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், தொழிலாளர் முன்னேற்ற பேரவை மாவட்டச் செயலாளர் சுசீரவீந்திரன், மாவட்ட நிர்வாகி கருப்பசாமி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் லோகநாதன், பொருளாளர் ஏ.பாலசிங்கம், சுப்பிரமணியன், ஹெச்எம்எஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் துறைமுகம் சத்யா, ராஜலெட்சுமி ராஜ்குமார்,ஏஐசிசிடியு சார்பில் மாவட்ட தலைவர் சகாயம், மாவட்டச் செயலாளர் த.சிவராமன், ஐஎன்டியுசி சார்பில்மாவட்ட தலைவர் ராஜகோபாலன், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் உள்ளிட்டு அரசு அலுவலகங்கள் முன்னால் அமைதியான முறையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஜனநாயக இயக்கங்களை தடைசெய்தும், இயக்கங்களுக்கு 7 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்றும் தன்னிச்சையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளோடு எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக அமைதியான முறையில் நடைபெற்று வரும் ஜனநாயக இயக்கங்களை தடை செய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ளதாக கருதுகிறோம். மக்கள் குறைகளை ஆட்சியாளர்களுக்கு வெளிப்படுத்தும் அறவழி ஜனநாயக இயக்கங்களை தடைசெய்வது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயலாகும். எனவே இந்த அறிவிப்பை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Similar News