உண்டியல் கோடி பணம் குவிந்தாலும் குப்பை எடுக்க ஆளில்லை: வேதனை
திருச்செந்துார் கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகம், மாசி விழா, கந்த சஷ்டி விழா, தேரோட்டங்கள் என ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம் தோறும் உண்டியல்கள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தற்போது சுமார் 300 கோடி ரூபாயில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியலில் கோடி பணம் குவிக்கிறது கடற்கரையில் குப்பை எடுக்க ஆளில்லை கழிவறை வசதியில்லை கடற்கரை முழுவதும் மனித மலக்கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இது தொடர்பாக அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.