கிராம உதவியாளர்களுக்கு ஊதியம், பணிப் பதிவேடு இல்லை: வட்டாட்சியரிடம் மனு!
விளாத்திகுளத்தில் கிராம உதவியாளர்களாக பணிக்கு சேர்ந்து 20 மாதங்களுக்கு மேல் ஆகியும் 16 கிராம உதவியாளர்களுக்கு ஊதியமும், பணி பதிவேடும் இல்லை என்று வட்டாட்சியரிடம் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கிராம உதவியாளர்களாக பணிக்கு சேர்ந்து 20 மாதங்களுக்கு மேல் ஆகியும் 16 கிராம உதவியாளர்களுக்கு ஊதியமும், பணி பதிவேடும் இல்லை என்று வட்டாட்சியரிடம் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு கடந்த 13.01.2023 அன்று கிராம உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட 16 பேருக்கு தற்போது வரை பணிப்பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை என்றும், தேர்வு செய்யப்பட்ட 16 கிராம உதவியாளர்களில் முத்தையாபுரம் கிராம உதவியாளர் ஆனந்த்ராஜ், சூரங்குடி கிராம உதவியாளர் அருண்குமார் மற்றும் மேல்மந்தை கிராம உதவியாளர் மனோஜ் ஆகிய மூன்று பேருக்கும் 20 மாதங்களுக்கு மேலாகியும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில், பாதிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர்கள் உட்பட விளாத்திகுளம் வட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம உதவியாளர்கள் ஏராளமானோர் விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணனிடம் தங்களது கோரிக்கையை தொடர்பாக மனுவை அளித்தனர். மேலும், கிராம உதவியாளர்களாக பணிக்கு சேர்ந்து 20 மாதங்களுக்கு மேல் ஆகியும் 16 கிராம உதவியாளர்களுக்கும் பணி பதிவேடு பராமரிக்காமல் இருப்பதும், அதில் மூன்று பேருக்கு தற்போது வரை ஊதியமே வழங்கப்படாத காரணத்தினாலும் அவர்களது குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் வட்டாட்சியரிடம் கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு ஊதியம் வழங்கப்படாத கிராம உதவியாளர்களுக்கு நிலுவையில் இருக்கும் 20 மாத ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அதேபோன்று பணியில் சேர்ந்த 16 கிராம உதவியாளர்களுக்கும் பணி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட இம்மனுவின் மீது எவ்வித நடவடிக்கை இல்லாத பட்சத்தில் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவிருப்பதாகவும் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதில் மாநில செயலாளர் வெயில் முத்து, மாநில தலைவர் ராஜசேகர், மாநில பொருளாளர் நாகப்பன், மாநில துணைத்தலைவர்கள் தில்லை கோவிந்தன், மாநில செயலாளர் முனியசாமி உட்பட ஏராளமான கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.