கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் குடியிருப்பு வாசிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
வரதராஜபுரம் ஊராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் - குடியிருப்பு வாசிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி, பரத்வாஜ் நகரில் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நகரில் ஊராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் பரப்பளவில் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தில் சமுதாய நலக்கூடம், ரேஷன் கடை, சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, போன்றவற்றை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு நீண்ட காலங்களாக வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே தற்போது ஊராட்சிக்கு சொந்தமான மேற்கண்ட காலி நிலத்தில் புதிதாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையுள்ளதாக மாவட்ட நிர்வாகம் , அறிவிப்பு பலகை மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு குடியிருப்பு வாசிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பருவ மழை காலங்களில், இந்த ஊராட்சியில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால், மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும். அதேபோல நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கும் என குடியிருப்பு வாசிகள் புகார் கூறுகின்றனர். அதே சமயத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் ஏற்படும் மாசு காற்றால், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகும் என்றும் மக்கள் அச்சமடைகின்றனர். எனவே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இங்கு அமைக்கும் திட்டத்தை, அரசு கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.