பல்லடம் நகராட்சியுடன் மாணிக்காபுரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
கருப்பு பட்டை அணிந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஊர் மக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாணிக்காபுரம் ஊராட்சியில் ராசாகவுண்டம்பாளையம்,மாணிக்காபுரம்,அம்மாபாளையம்,வைரம் நகர்,மின் நகர்,கருப்பண்ணசாமி நகர்,திருவள்ளுவர் நகர்,சி.எம் நகர்,அம்மன் நகர்,நேரு நகர் ,வள்ளலார் நகர் ஆகிய கிராமங்களில் சுமார் 14 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் விசைத்தறி தொழில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பல்லடம் நகராட்சியோடு மாணிக்காபுரம் ஊராட்சி பகுதிகளை இணைக்க உள்ளதாக அறிவிப்பாணைகள் வெளியான நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராசாகவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்கள் நகராட்சியோடு இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். நகராட்சியோடு தங்களது ஊராட்சியை இணைத்தால் சொத்து வரி வீட்டு வரி ஆகியவை உயரும் அபாயம் உள்ளதாகவும், சுமார் 1500க்கும் மேற்பட்டவருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகும் எனவும், கலைஞரின் கனவு இல்ல திட்டம் பிரதம மந்திரியின் இலவச வீடு வழங்கும் திட்டம் ஆகியவை தங்கள் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு கிடைக்காது எனவும் நகராட்சியோடு மாணிக்கபுரம் ஊராட்சியை இணைக்க கூடாது என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து மூன்றாவது முறையாக கிராமசபை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.