விருத்தாசலத்தில் நல்லிணக்க நடை பயணம் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு
எம் எல் ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி சென்றதால் பரபரப்பு
விருத்தாசலத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மத நல்லிணக்க நடை பயணம் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு விருத்தாசலம் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் போலீசார் அனுமதிக்காததையும் மீறி விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட பொருளாளர் ராஜன், நகர தலைவர்கள் விருத்தாச்சலம் ரஞ்சித்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, மங்கலம்பேட்டை வேல்முருகன், கந்தசாமி, வட்டாரத் தலைவர்கள் பீட்டர், சாந்தகுமார், ராவணன், கலியபெருமாள், முருகானந்தம், வழக்கறிஞர் பழனிவேல் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, லெனின், ஜெயகுரு, லாவண்யா, சத்தியா, சரசு, அன்பரசு மற்றும் பலர் விருத்தாசலம் நகராட்சி வீதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து அமைதி நடை பயணம் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அதனால் நடை பயணம் மேற்கொள்ளக்கூடாது. என தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீஸ் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்று கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தலைமையிலான போலீசார் அங்கு வந்து நடைபயணம் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினார்கள். அப்போது எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் இது ஜனநாயக நாடு. நாங்கள் மத நல்லிணக்கணத்தை வலியுறுத்தி தான் அமைதி நடைபயணம் சென்று கொண்டிருக்கிறோம். எனக் கூறிவிட்டு அங்கிலிருந்து விருத்தாசலம் கடைவீதி பாலக்கரை ஜங்ஷன் சாலை வழியாக விருத்தாச்சலம் பஸ் நிலையத்தின் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலை வரை நடை பயணம் சென்று அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.