கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த மருத்துவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி டீன் நேரு தலைமை தாங்கினார். மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, நிலைய மருத்துவ அலுவலர் பொற்செல்வி, துணை முதல்வர் ஷமீம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அறுவை சிகிச்சை துறை பதிவாளர் தமிழ்ச்செல்வன், மயக்கவியல் துறை பேராசிரியர் ஹாஜாஷரீப் மற்றும் அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் துறை உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் கல்லுாரி டீன் நேரு நிருபர்களிடம் கூறியதாவது; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பித்தப்பை, ஒட்டு குடல், குடல்வால், குடல் இறக்கம் உள்ளிட்ட நோயாளிகள் 600 பேருக்கு லேப்ரோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது என்றார். முன்னதாக சர்வதேச முதியோர் தின விழாவையொட்டி, சென்னையில் சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் 1000 பேருக்கு முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் படிப்பினை துவக்கி வைத்தார்.