விசாரணையின் போது தப்பிக்க முயன்ற அக்னி பிரதர்ஸ்
என்கவுண்டர் பயத்தில் பள்ளத்தில் குதித்ததில் இரண்டு குற்றவாளிகளுக்கு கால் முறிவு
பல்லடம் அருகே கரையான்புதூர் பகுதியில் கடந்த மாதம் வினோத் கண்ணன் என்ற பிரபல ரவுடி தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அக்னி பிரதர்ஸ் குழுவை சேர்ந்த பத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த தங்கராஜ்,ராஜேஷ்,ஆகியோரை விசாரணைக்காக போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து அழைத்து வந்த நிலையில் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்களை சோமனூர் பகுதியில் செயல்படாத கல்குவாரி ஒன்றில் மறைத்து வைத்திருந்ததாக இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இத்தகவலையடுத்து அவர்களை அப்பகுதிக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றபோது என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தங்கராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தினுள் தவறி விழுந்ததில் ராஜேஷின் இடது கால் மற்றும் தங்கராஜின் வலது கால் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு தற்பொழுது முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சையில் உள்ள இரண்டு குற்றவாளிகளையும் பல்லடம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா விசாரணை மேற்கொண்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது தங்கராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை வழக்கில் தொடர்புடைய தங்கராஜ் என்பவன் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்கு நான்கு கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகள் உள்ளதும் ராஜேஷ் என்பவன் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.