கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் டோக்கன் முடிவடைந்ததால் ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள மக்கள் அஞ்சலகத்தை முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் 2 கணினிகளின் மூலம் ஆதார் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நேற்று அதிகாலை முதல் அதிகளவிலான பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது, டோக்கன் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலை 7:00 மணியளவில் அஞ்சலகம் முன் முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். கூட்டம் அதிகரித்திருப்பதை அறிந்த விருத்தாசலம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப், கூடுதலாக ஒரு கணினி அமைத்து ஆதார் பணி மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து கூடுதலாக 100க்கும் மேற்பட்ட டோக்கன் விநியோகிக்கப்பட்டது.