விருத்தாசலம் அருகே விவசாய பயன்பாட்டிற்கு குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மண் எடுத்துச் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி மற்றொரு கிராமத்தினர் போராட்டம்
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருப்பு ஊராட்சியில் நாச்சி வெள்ளையன்குப்பம், நெல்லடிக்குப்பம் கிராமங்கள் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள பெராலி குளத்தில் விவசாய பயன்பாட்டிற்காக மண் வெட்ட கடந்த சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலம் வருவாய் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த குளத்தை இரண்டு கிராம மக்களும் தங்களுக்கு தான் சொந்தம் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் நெல்லடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீரென மண் அள்ளி சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, தனிநபர் ஒருவர் அனுமதி வாங்கி மண் எடுத்து விற்பனை செய்கிறார். அதனால் மண் வெட்டக்கூடாது என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற முத்தாண்டிக்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நாச்சிவெள்ளையன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு விவசாய பயன்பாட்டிற்கு மண் தேவைப்படுகிறது. அதனால் மண் வெட்ட அனுமதிக்க வேண்டும் எனக் கூறி விருத்தாசலம் காட்டுக் கூடலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். தகவல் கிடைத்து விரைந்து சென்ற சப இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையிலான முத்தாண்டிக்குப்பம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த விருத்தாச்சலம் வருவாய் துறைக்கு பரிந்துரை செய்யப்படும். பேச்சுவார்த்தை முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.