கோவில் இடத்தில் தனிநபர் பாதை கேட்டு மிரட்டுவதாக தாசில்தாரிடம் இந்து முன்னணியினர் புகார்
நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி
முடப்புளி இந்து முன்னணி நிர்வாகி அருள்மணி தலைமையில் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் மங்கலம்பேட்டை மணிகண்டன், செல்வம், வினோத் மற்றும் பலர் விருத்தாசலம் தாசில்தார் உதயகுமாரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் முடப்புளி கிராமத்தில் பெரிய ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழிபட்டு வருகின்றனர். அந்த கோவிலை சுற்றி நிலங்கள் உள்ளன. நிலத்தின் உரிமையாளர்கள் கோவில் வழியாகத்தான் நடந்து சென்று வருகின்றனர். தற்போது தனிநபர் ஒருவர் அவர் நலத்தில் கோழி பண்ணை வைத்திருப்பதால் எனக்கு கோவில் இடத்தில் ரோடு வேண்டும் என கேட்டு கடந்த இரண்டு ஆண்டு காலமாக தகராறு செய்து வருகிறார். நாங்கள் உயர் நீதிமன்றம் மூலமாக இந்த இடம் கோவிலுக்கே சொந்தம் என்றும் தனிநபருக்கு வழி தர முடியாது என்றும் உத்தரவை வாங்கியுள்ளோம். அந்த தனிநபர் அரசியல் செல்வாக்குடன் இருப்பதால் அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறார். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் உதயகுமார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.