கல்லூரிகளில் போதைப் பொருள் தடுப்புக் குழு : டிஐஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கல்லூரிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு உருவாக்க நெல்லை சரக புதிய டிஐஜி மூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-10-06 07:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென் தமிழகத்திலுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சரக துணைத் தலைவர் பா.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் முன்னிலை வகித்தார். எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களை எடுத்துரைத்தார். போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திடவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்திடவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவல் துறைக்கு ஏற்கனவே உத்திரவிட்டுள்ளார்கள். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைக்கு எதிரான மாணவர் குழுக்களும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மற்றும் இதர மாணவர்கள் இயக்கங்களின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு தன்னார்வலர் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் தடுப்புக் குழுக்களை உருவாக்குவது குறித்த கலந்தாய்வு கூட்டத்தை திருநெல்வேலியில் நடத்துவது எனவும் அதைத் தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புக் குழுக்களின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவ மாணவியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கை மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் நடத்துவது எனவும் மேலும் கல்லூரிகளில் போதை விழிப்புணர்வு முகாம்களை சிறப்பாக நடத்துவது எனவும் அவற்றின் தொடர் செயல்பாடுகளை மேம்படுத்த அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இதில் திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் இரவீந்திரன், அண்ணா பொறியியல் பல்கலைக்கழக டீன் செண்பக விநாயக மூர்த்தி, திருநெல்வேலி மாவட்ட மது விலக்குத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன், தூத்துக்குடி மாவட்ட மது விலக்குத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் அருள், கன்னியாகுமரி மாவட்ட மது விலக்குத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், தென்காசி மாவட்ட மது விலக்குத் துறை காவல் ஆய்வாளர் கபீர் தாசன் மற்றும் சமூக ஆர்வலர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News