உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 'அட்வைஸ்'
தீபாவளிக்கு தரமான பொருட்களை தயாரிக்க பேக்கரிகளுக்கு 'அட்வைஸ்'
தீபாவளியை முன்னிட்டு தரமான இனிப்பு,கார,மிட்டாய் வகைகளை தயாரிக்க வேண்டும் என திண்டுக்கல் பேக்கரி உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 'அட்வைஸ்' கொடுத்துள்ளனர்.தீபாவளி சமயத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் இனிப்பு,இனிப்பு கார வகையிலான மிட்டாய் வகைகளை தயாரித்து சாப்பிடுகின்றனர். சிலர் தங்கள் உறவினர்களுக்கும் கொடுக்கின்றனர். தற்போது நவீன காலத்திலிருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளில் செய்யாமல் இனிப்பு,கார வகைகளை தயாரிக்கும் பேக்கரிகளில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். தாங்கள் விரும்பும் நபர்களுக்கும் அனுப்புகின்றனர். இந்த தொழில் தீபாவளி சமயத்தில் சூடுபிடிக்கும். இதனால் பலரும் தங்கள் பேக்கரிகளில் ஏராளமான இனிப்பு,கார வகையிலான மிட்டாய்களை தயாரிக்கின்றனர். இதில் சிலர் பார்வையாளர்களை கவர்வதற்காக கூடுதல் செயற்கை வண்ணம்,பழைய எண்ணெய்களை பயன்படுத்துவது,சுகாதாரமில்லாமல் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை வாங்கி உண்ணும் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகும் நிலையும் தொடர்கிறது. 2024 அக்.31ல் தீபாவளி கொண்டாட இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் பேக்கரி உரிமையாளர்களை அழைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தார். ஏற்கனவே பயன்படுத்திய பழைய எண்ணெய்களை பயன்படுத்த கூடாது. கூடுதலாக செயற்கை வண்ணம் சேர்க்க கூடாது. சுகாதாரமாக மிட்டாய்களை தயாரிக்க வேண்டும். திறந்தவெளியில் உணவு பொருட்களை வைக்க கூடாது. அடிக்கடி ஆய்வுக்கு வருவோம் சிக்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என 'அட்வைஸ்'செய்தனர்.