கந்த சஷ்டி திருவிழாவுக்குள் ஆத்தூர் பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை
கந்தசஷ்டி திருவிழாவுக்குள் முக்காணி மேம்பாலத்தினை சீரமைத்து போக்குவரத்திற்காக திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பால பராமரிப்பு பணியானது பல மாதங்களாக நடைபெற்று வருகின்றது. ஆனால் இதுவரையில் சீரமைக்கப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்படவில்லை. இதனால் பழைய தரைமட்ட பாலத்தையே அவ்வழியாக செல்லும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்று வரும் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழாவிற்கு பல லட்சக்கணக்கான பொதுமக்கள் ஆத்தூர் வழியாக செல்லும் நிலையில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அடுத்த ஓரிரு வாரங்களில் தீபாவளித் திருநாளும் அதனை தொடந்து திருச்செந்தூர் செந்தில்ஆண்டவர் திருக்கோவில் கந்தசஷ்டி விழாவானது தொடங்க இருக்கின்றது. இந்த சஷ்டி தினத்தன்று ஆண்டுதோறும் தசராதிருநாளில் குலசேகரப்பட்டனத்திற்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது போன்றே தமிழ்நாட்டு மட்டுமல்லாது கேரளா ஆந்திரா போன்ற வேறுசில மாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூர் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதே போன்று தற்போது பருவமழைகாலம் துவங்கி உள்ளதால் ஏற்கனவே பாசனத்திற்காக மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் இன்னும் திறக்கப்படாமல் ஆற்றுநீரானது கடலில் வீணாக கலந்துவரும் நிலையில் பருவமழை மேலும் தீவிரம் அடையும் பட்சத்தில் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தற்போது போக்குவரத்திற்காக பயன்படுத்தி வரும் பழைய ஆத்தூர் ஆற்றுபாலம் ஆற்றுநீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு ஆற்றுநீரில் மூழ்கினால் அருகில் உள்ள ஏரல் பாலம் இன்னும் சீர்மைக்கப்படாததால் வெகுதொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஆற்றுபாலம் வழியாக மட்டுமே கடக்க கூடிய அசாதாரண சூழல் உண்டாகும். எனவே மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் ஆத்தூரில் உள்ள மேம்பாலத்தின் பராமரிப்பு பணியை முடித்து போக்குவரத்திற்காக திறந்து விட நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.