விசைத்தறி தொழிலாளர் சங்கம் கூட்டம் நடைபெற்றது
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க பள்ளிபாளையம் ஒன்றிய குழு கூட்டம் சங்க ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் காவேரி ஆர்.எஸ் தொழிற்சங்க அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிப்பாளையம் வட்டார பகுதி முழுவதும் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண் பெண் தொழிலாளர்களுக்கும் இந்த ஆண்டு தீபாவளி போனஸ் 20 சதம் வழங்க வேண்டும் என ஏற்கனவே நடைபெற்ற பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விசைத்தறி நிர்வாகிகளுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வருக்கும் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரையிலும் விசைத்தறி நிர்வாகங்கள் தொழிலாளர்களின் போனஸ் கோரிக்கை சம்பந்தமான எவ்வித பேச்சுவார்த்தைக்கும் உட்படவில்லை. மேலும் கடந்த 10 ஆண்டுகளாகவே போனஸ் உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளது . எனவே தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நலத்துறை உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பள்ளிபாளையம் வட்டார பகுதி முழுவதும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் தெருமுனை கூட்டம் நடத்துவது ,வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஏராளமான விசைத்தறி தொழிலாளர்களை திரட்டி தீபாவளி போனஸ் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை கண்டிக்கும் வகையில் பட்டை நாமம் போட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.மோகன் , மாவட்ட செயலாளர் எம்.அசோகன், பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார், மற்றும் ஒன்றிய குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.