கர்நாடகா மாநிலம் நந்தி துர்கா மலையில் உருவெடுக்கும் தென்பெண்ணை ஆற்றின் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை நிரம்பும். வழக்கமாக தென்மேற்கு பருவமழையின்போது அணை நிரம்பி விடும். ஆனால், இந்த ஆண்டு நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாதததால் அணையில் குறைந்த அளவு தண்ணீரில் இருந்தது. கடந்த மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கிய வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 119 அடி உயரமும், 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவும் உடைய அணையில், 117 அடி உயர்ந்து 6,875 மில்லியன் கன அடி நீர் இருந்தது. வழக்கமாக நவம்பர் மாத இறுதி வரை 117 அடிவரை பராமரிக்க வேண்டும். அதற்கு மேல் வரும் தண்ணீர் விவசாய பயன்பாட்டிற் காக வெளியேற்ற வேண்டும். இது சட்ட விதி என்ற நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கான நீர்வரத்து 1080 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இனி வரும் நாட்களில் அணைக்கு வரும் நீர் முழுதும் அப்படியே வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்த நிலையில், திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.