நாமக்கல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 347 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த ச.திவ்யா தையல் இயந்திரம் வேண்டி அளித்த மனுவின் அடிப்படையில் உடனடியாக அதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.6,690/- மதிப்பில் தையல் இயந்திரத்தையும், 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,780/- மதிப்பில் காதொலிக்கருவி மற்றும் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.730/- மதிப்பில் தாங்கு கட்டை (அக்குள் கட்டை) உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.