நாமக்கல்: ஞாயிறு முதல் புதிய பேருந்து நிலையம் இயக்கம் மாவட்ட ஆட்சியர் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து வருகின்ற 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தகவல்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 05-11-2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், மேயர் து.கலாநிதி முன்னிலையில் நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 22.10.2024 அன்று நாமக்கல் மாநகராட்சி, முதலைபட்டியில் ரூ19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்ட்டது. அனைத்து புறநகர் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திற்கு முழுமையாக பொதுமக்களுக்கு சிரமமின்றி மாற்றப்பட வேண்டும். பேருந்து நிலையத்தில் விளம்பர காணொலி மூலம் பேருந்துகளின் நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பேருந்து நேர விவரங்கள் திரையிட வேண்டும். விபத்துகளை தவிர்க்க பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப வேகத்தடையினை அமைக்க வேண்டும். மக்கள் பயன்படும் வகையில் பேருந்து நிறுத்தத்திற்காக அண்ணா சாலை, கோஸ்டல் சாலை, வள்ளிப்புரம் சாலை ஆகிய இடங்களில் 5 பயணிற் நிழற்குடை அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் மக்கள் பயன்படும் வகையில் உடனடியாக இயங்க வேண்டும். பழைய பேருந்து நிலையம் இராசிபுரம் சென்று திரும்பும் அனைத்து நகர பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் சென்று வர வேண்டும். பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல 10 நிமிடத்திற்கு ஒரு முறை என அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 117 நடைகள் தினசரி இயக்கப்படும். பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை நகர பேருந்து கட்டணம் ரூ.7.00 ஆகவும், புற நகர பேருந்தின் சாதாரண கட்டணம் ரூ.7.00 ஆகவும் விரைவு பேருந்து கட்டணம் ரூ.10.00 ஆகவும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து வரும் பேருந்துகள் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையிலிருந்து சேலம் சாலை திரும்பி வந்து புதிய பேருந்துநிலையம் செல்ல வேண்டும். இதன்படி, வருகின்ற 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாமக்கல் மாநகராட்சி முதலைபட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பேருந்து பயணத்தின் போது மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை புகார் தெரிவிக்க காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தங்களுடைய புகார்களை நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையின் 1800 599 7990 இலவச தொலைப்பேசி எண்ணிலும், மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையின் 1800 425 1997 எண்ணிலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் செ.பூபதி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்த்தீபன், நாமக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் ஆ.சண்முகம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தன்ராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகுணா ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.