சூரனை சம்ஹாரம் செய்ய வேல் வாங்கிய முருகன்.
கபிலர்மலை முருகன் கோவிலில் சூரனை சம்ஹாரம் செய்ய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,நவ. 6: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாள் பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முதலாவதாக மதியம் முருகன் மலை மீது இருந்து மலையின் அடிவாரத்தில் உள்ள மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணி அளவில் முருகன் சூரனை வதம் செய்ய அன்னை பார்வதி தேவியிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு கந்த சஷ்டி தினத்தில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றன.