திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் தமிழக பால் வளம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு!
திருப்பூர், வீரபாண்டி பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் தமிழக பால் வளம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் ஆவின் நிலையங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு தீபாவளி பண்டிகையொட்டி 24 கோடிக்கு கூடுதலாக பால் விற்பனை. திருப்பூரில் பால்வளத்துறை அமைச்சர் பேட்டி. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ராமர் பாளையத்தில் தொகுப்பு பால் குளிரகத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவிநாசி சாலையில் உள்ள தமிழ்நாடு கதர் தொழில் வாரியத்தின் மண்டல துணை இயக்குநர் அலுவகத்தில் கதர் உற்பத்தி ரகங்களை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடந்து வீரபாண்டி பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவகத்தில் ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆவின் நிலையங்களில் 50,000 லிட்டர் பால் விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். தமிழகத்தில் ஆவின் நிலையங்களில் பால்விலையை குறைந்தது நமது அரசு தான். ஆவின் பால் நிலையங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம் அதன் மூலம் தீபாவளி விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 25 கோடி அதிகரித்துள்ளது. ஆவின் மூலமாக ரூ.40-க்கு ஒரு லிட்டர் பால் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. நெய், பால்கோவா உள்ளிட்ட 48 பால் உபபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தரத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பில் தானியங்கி பன்னீர் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் முதல்வரால் திறந்து வைக்கப்படும்.இதுபோன்று தமிழகம் முழுவதும் சுமார் 24 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் மிகச் சிறப்பாக செயல்படவேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாகும். பால் உற்பத்தியை கூட்ட வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது 6 லட்சம் லிட்டர் கூட்டப்பட்டுள்ளது. பால் உற்பத்தியை 54 லட்சம் லிட்டர் ஆக உயர்த்த வேண்டும் என்பதே எங்களது இலக்காக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் பால் தட்டுப்பாடு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 30 நாட்களுக்கு கெடாமல் இருக்கும் வகையில் பால் தயாரிக்கப்படுகிறது இதற்காக சென்னை சோழிங்கநல்லூரில் புதிதாக ஆய்வகம் அமைக்கப்பட்டு அங்கு நாள்தோறும் 40 ஆயிரம் லிட்டர் பால் தயாரிக்கப்படுகிறது. அதனை தற்போது ஏற்றுமதியும் செய்து வருகிறோம் அடுத்து வரும் மூன்று மாதங்களில் பால் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வு காணப்பட்டு சரி செய்யப்படும் என்றார். இந்த ஆய்வில் ஆவின் நிர்வாக இயக்குனர் வினித், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.