திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, கனகனந்தல் சாலையில், டாஸ்மாக் கடை உள்ளது. அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, இதனை அகற்ற பா.ம.க., சார்பில் கடையின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, சப் கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங், தாசில்தார் ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., பார்த்திபன் பங்கேற்றனர். பா.ம.க., சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமையில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் செழியன், மாவட்ட தலைவர் ராஜ்குமார், வழக்கறிஞர் சரவணகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 20 நாட்களுக்குள் ஆய்வு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூறி கலைந்து சென்றனர்.