வீடுகட்டும் பணியின்போது தவறி விழுந்து ஒருவர் பலி!
வீடுகட்டும் பணியின்போது தவறி விழுந்து ஒருவர் பலியானார்
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள சரவணாபுரம் கீழ தெருவை சேர்ந்த உலகப்பன் மகன் வள்ளிராஜ் (49). இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதில் கட்டாரங்குளம் கிராமம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலு (68) உள்பட கட்டிட தொழிலாளிகள் வேலை பார்த்தனர். நேற்று காலையில் வழக்கம்போல் அனைத்து தொழிலாளர்களும் கட்டிட வேலையில் ஈடுபட்டு இருந்தனர். இதில் மாடியில் வேலை பார்த்து கொண்டு இருந்த பாலு எதிர்பாராத விதமாக திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த சக தொழிலாளர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து பார்த்த அவர் நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா (பொறுப்பு) மற்றும் போலீசார் சென்று, பாலு உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பாலு மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் வள்ளிராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமலிங்கம் (52) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கட்டிட தொழிலாளி பாலுவிற்கு சாந்தா (56) என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். கட்டிட தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.