வெள்ளம் பாதித்த பகுதியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு.

பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-12-04 16:01 GMT
பரமத்தி வேலூர்,டிச. 4: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வெள்ள நிவாரண முகாம்களில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை நேரில் பார்வையிட்டு வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக அருகிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதையும், மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கிடுமாறும், வெள்ள நீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, பரமத்தி வேலூர் வட்டம், திருமணிமுத்தாறில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, திருமணிமுத்தாறின் நீர் பிடிப்பு பகுதிகளான சேலம் மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் சென்று கொண்டிருக்கிறது. எனவே, கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நீர் பிடிப்பு பகுதிகளின் மழை அளவு, தற்போதைய நீர் வரத்து உள்ளிட்ட விவரங்களை நீர்வள ஆதார துறையினரிடம் கேட்டறிந்தார். மேலும் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வருவாய் துறை மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News