மணிமுத்தாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கோரிக்கை

Update: 2024-12-11 17:53 GMT
விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து விருத்தாசலம் பகுதியில் மணிமுத்தாற்றில் தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம். நல்லூர் கிராமத்தில் மணிமுத்தா நதி மற்றும் கோமுகி நதி ஒன்று சேரும் இடத்தில் 20 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொள்ளவும், கொளப்பாக்கம் கிராமத்தில் சேப்பாக்கம் அருகே 16 கோடி மதிப்பீட்டில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கவும், ஐவதகுடி கிராமத்தில் மணிமுத்தா ஆற்றில் குறுக்கே 17 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கவும் தமிழக முதல்வர் அமைச்சர் அவர்களால் 2020-21 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இது நாள் வரை இப்பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த பணிகளானது உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே விருத்தாசலம் தொகுதி விவசாயிகள் நலன் கருதியும் பொது நோக்கம் கருதியும் இந்த பணிகள் மேற்கொள்ள 2024-25 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கி பணி துவங்கிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து முதலமைச்சரின் முதல் நிலை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தார்.

Similar News