சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று காலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், நேற்று இரவு தொடங்கி, விடிய விடிய பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது என்றும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என்றும் இதன் காரணமாக டெல்டா மற்றும் வடமாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.