ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே ஶ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 5 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் திருங்கடம்பந்துறை காவிரி நதிக்கரையில் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி மற்றும் கடம்பர் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் கலசங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் நான்கு கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்து கோவில் மேல் உள்ள கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பக்தர்கள் நனைந்தபடி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் மேல் உள்ள கலசத்திற்கு தீபாரதனை மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.