விருத்தாசலம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது
மணிலா நெற்பயிர்கள் அழுகி வரும் அவலம்;
விருத்தாசலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் விருத்தாசலம் பகுதிகளில் உள்ள ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து காட்டாற்று வெள்ளமாக சென்றததால் நிலங்களில் புகுந்த மழை நீர் வடிவதற்கு வழி இல்லாமல் நிலத்திலேயே தேங்கி நிற்கிறது. இதனால் விருத்தாசலம் கம்மாபுரம் ஆலடி மங்கலம்பேட்டை கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் மணிலா உளுந்து உள்ளிட்ட விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. தற்போது நெற்பயிர்கள் பூப்பூக்கும் தருவாயில் உள்ளது. ஆனால் இந்த நேரத்தில் கனமழை பெய்து நிலத்தில் பயிர்கள் மூழ்கியுள்ளதால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டு நெல்மணிகள் அனைத்தும் பதராக மாறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பா பின்பட்டத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி வேர்கள் அழுகும் அபாய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் சம்பா பயிர்கள் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். மகசூல் அறவே கிடைக்காது என கண்ணீர் மல்க கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் மணிலா விவசாயிகள் உழவு செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது பெய்த கனமழையின் காரணமாக முளைத்து வந்த அனைத்து மணிலா பயிர்களும் தண்ணீரிலேயே மூழ்கி கிடக்கிறது. தண்ணீர் வடிந்தாலும் மணிலா பயிர்கள் இனிமேல் பிழைக்காது என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் விருத்தாசலம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய இழப்பீட்டினை தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.