விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சொக்கப்பனை ஏத்தும் நிகழ்ச்சி
பஞ்ச மூர்த்திகள் வீதி உலா;
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருதாம்பிகை உடனுறை விருதகிரிஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாரதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருள கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 5 சொக்கப்பனைகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சொக்கப்பனை எறிந்த போது பட்டாசுகள் வெடிக்க, தீப்பொறி எழுந்த போது கரகர மகா தேவா கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.