கடலூரில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைகேட்பு முகாம்

தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது;

Update: 2024-12-14 16:30 GMT
கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி டிசம்பர் மாதத்திற்கான பொது விநியோக திட்ட குறை தீர் முகாம் கடலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. முகாமிற்கு குடிமை பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் கடலூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் மற்றும் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 50க்கும் மேற்பட்ட மனுக்களை தனி தாசில்தாரிடம் அளித்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாமில் தாலுக்கா அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கடலூர் வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் சங்கத்தின் தலைவர் போஸ் ராமச்சந்திரன் தலைமையில் பொது விநியோகத் திட்டத்தில் கடைகளில் இந்த பொருட்களை வாங்கினால் தான் மற்ற பொருட்கள் வழங்கப்படும் என்ற விதிமுறையை தளர்த்த வேண்டும் என்றும், பொது விநியோக திட்டத்தில் நியாய விலை கடைகளில் ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தாசில்தார் ஜெயக்குமாரிடம் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் செயலாளர் பாலசுந்தரம், இணை செயலாளர் புருஷோத்தமன், செய்தி தொடர்பாளர் டாக்டர் டி மச்சேந்திர சோழன், குணசேகரன், செந்தாமரைக்கண்ணன், சௌந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் சிதம்பரம் விருத்தாசலம் உள்பட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று பொது விநியோகத் திட்ட குறை தீர் முகாம் நடந்தது.

Similar News