அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் அனைத்து துறைகளிலும் பணிபுரிந்த ஊழியர்கள் பணி நிரவல் அடிப்படையில், பல்வேறு அரசு துறைகளில் பணியாற்ற பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் 9 ஆண்டுகளை கடந்தும் எந்த ஒரு பணப்பயனும் பெறாமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பணி நிரவல் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே பணி அமர்த்த வேண்டும். அல்லது தற்பொழுது பணிபுரியும் துறையிலேயே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை. எனவே இதனை கண்டித்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று மாலை கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.டி.அன்பழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சே.குமரவேல், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஜே. நடனசபாபதி, எஸ்.பிரேம்ராஜ், பி.பாலமுருகன், பி.கண்ணதாசன், வீ.அருள், எஸ்.கணேஷ், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.