நாமக்கல்லில் சாலை விபத்தில் பலியான அபுதாபி இளம் இன்ஜினியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு!- சமரச நீதிமன்றத்தில் தீர்வு!

இழப்பீடு கேட்டு சமரச தீர்வு மையத்தை அணுகினோம். தற்போது 5 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு பெறுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-12-19 15:47 GMT
  • whatsapp icon
நாமக்கல்லில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் வழக்குகளுக்கு சமரச தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த பட்டணம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர், வெளிநாட்டில் வேலை புரிந்துவிட்டு தனது மகனின் பெயர் வைக்கும் நிகழ்வுக்காக நாமக்கல் - தில்லைபுரம் வீட்டிற்கு வந்திருந்தார். சம்பவத்துன்று நாமக்கல் திருச்சி சாலை நாகராஜபுரம் அருகே கடந்த 2023 செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடந்த சாலை விபத்தில், டாடா ஏஸ் வாகனம் மோதி உயிரிழந்தது தொடர்பான வழக்கு இந்த சமரச மையத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம், (மூன்றாம் நபர் காப்பீடு) ரூபாய் 8 கோடியே 30 இலட்சம் இழப்பீடு வழங்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். சமரச மையத்தில் இதற்கான சமரச அமர்வு நடைபெற்றது.இதனையடுத்து அந்த தனியார் காப்பீடு நிறுவனம், ரூபாய் 5 கோடி அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான குருமூர்த்தி, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்க சம்மதம் தெரிவித்த, 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான உத்தரவு நகலை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினார். இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் சிறப்பு அமர்வில் ஓய்வுபெற்ற நீதிபதி பி. நல்லதம்பி. ஆர். அய்யப்பன் மற்றும் எஸ். சங்கர் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றனர்.
இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான வாதாடிய வழக்கறிஞர் என்.கே.பி.வடிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது.....
தமிழக அளவில் விபத்து இழப்பீடு தொகையாக ரூ. 5 கோடி ரூபாய் அளவிற்கு சமரச தீர்வு எட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த விபத்து வழக்கு 10 மாதத்தில் சமரச தீர்வு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் என்றார். விபத்தில் உயிரிழந்த கௌதமின் மனைவி சுஷ்மிதா கூறும்போது... எனது கணவர் குழந்தையை பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டது என்றும், இந்த விபத்தில் தமது கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக இழப்பீடு கேட்டு சமரச தீர்வு மையத்தை அணுகினோம். தற்போது ரூ. 5 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு பெறுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்வில், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி வழக்கறிஞர் ஆர்.தனபால் உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர்.இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / சார்பு நீதிபதி ஜி.கே. வேலுமயில் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.நாமக்கல் மாவட்ட சமரச தீர்வு மையத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் நடைபெற்ற இந்த சமரச தீர்வு அமர்வில் விபத்து வழக்கில் ரூ.5 கோடி ரூபாய் அளவிற்கு தீர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அளவில் இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News