நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களில் அகற்ற கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசே அகற்றி, அது தொடர்பான அறிக்கையை அமர்வில் டிச.23-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது. இது தொடர்பாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கடந்த 18-ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அந்த கழிவுகளை தமிழக அரசு அகற்றி, அதற்கான செலவை கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. தொடர்ந்து, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர், "ஏற்கெனவே கேரள பகுதியில் இருந்து மருத்துவக் கழிவுகள், தமிழகத்தில் ஆனைமலை, நாங்குநேரி ஆகிய பகுதிகளில் கொட்டப்பட்டுள்ளது. இப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் வனப் பகுதியில் கோடகநல்லூர், பழவூர், சிவனார்குளம், கொண்டாநகரம் ஆகிய பகுதிகளில் கடந்த 16, 17, 18 தேதிகளில் கொட்டப்பட்டுள்ளது. கேரள அரசு தமிழக பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவது தொடர்கதையாக உள்ளது. ஏற்கெனவே நாங்குநேரி பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றியதற்காக ரூ.69 ஆயிரம் செலவு தொகையை கேரள அரசு இன்னும் தரவில்லை. அதனால் தற்போது 4 கிராமங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசே அகற்ற அறிவுறுத்த வேண்டும் என்று வாதிட்டார். தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாடு வாரிய தரப்பு வழக்கறிஞர், "இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'தமிழக பகுதியில் மருத்துவக் கழிவு மற்றும் திடக்கழிவுகளை கொட்டிய கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் தனியார் ஓட்டல் ஆகியவை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி கழிவுகளை தமிழக பகுதிகளில் கொட்டுவதை கண்காணிக்க காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தனது வாதத்தை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, தற்போது மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதி, வனப்பகுதி. இவ்வாறு கொட்டப்படுவதால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் மற்றும் திடக் கழிவுகளை கேரள அரசு 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். பின்னர் அது தொடர்பான அறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான வரும் டிச.23-ம் தேதி, அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும் என அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டுள்ளனர்.