விருத்தாசலத்தில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

போலீசாருக்கும் எம்எல்ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சாலை மறியல் செய்ய முயற்சித்ததால் பரபரப்பு

Update: 2024-12-19 17:50 GMT
நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் ராஜன், மாநில செயலாளர் அன்பரசு, நகரத் தலைவர்கள் விருத்தாசலம் ரஞ்சித்குமார், நெய்வேலி ஸ்டீபன், மங்கலம்பேட்டை வேல்முருகன், பெண்ணாடம் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை அவதூறாக பேசிய அமித் ஷா பதவி விலக வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கட்சியினர் கோஷம் போட்டு கொண்டிருந்தனர். அப்போது போக்குவரத்தை சரி செய்வதற்காக போலீசார் கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் மூலம் குரல்வழி அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர். இதனால் அதிக சப்தம் இருப்பதாக எம்எல்ஏ தரப்பினர் போலீசாரிடம் கூறினர். ஆனால் இதை சற்றும் கண்டு கொள்ளாத போலீசார் ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் சாலையின் நடுவே சென்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்ற வகையில் நாங்களே ஒலிபெருக்கி எதுவும் இல்லாமல் கோஷம் இட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஏன் எங்கள் போராட்டத்திற்கு தொந்தரவு செய்யும் வகையில் அதிக சத்தத்துடன் தேவையில்லாத வார்த்தைகளை ஒலிபெருக்கியில் பேசுகிறீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்ததுடன் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கட்டிய அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் சிதம்பரம், சேலம், கடலூர் மார்க்கம் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதில் வட்டாரத் தலைவர்கள் ராவணன், சாந்தகுமார், பீட்டர் சாமி கண்ணு, கலியபெருமாள், முருகானந்தம், பரமசிவம், கொரக்கவாடி சக்திவேல், சுரேஷ், கலைச்செல்வன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News