மங்கலம்பேட்டை பேரூராட்சியுடன் 3 கிராமங்கள் இணைப்பு குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு
வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்ததால் பரபரப்பு
விருத்தாசலம் அடுத்த ரூபநாராயணநல்லூர், கோவிலானூர் மற்றும் கர்ணத்தம் ஆகிய 3 கிராமங்களை மங்கலம்பேட்டை பேரூராட்சியுடன் இணைப்பது குறித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேற்று காலை இந்த கிராமங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது, இந்த 3 ஊராட்சிகளின் எல்லை அளவுகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கர்ணத்தம் கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்த கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார், அங்கு அருகில் இருந்த விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனாம்பாளிடம், நான் பார்வையிட்ட ஒவ்வொரு ஊராட்சியிலும் சாலையின் இருபுறமும் குப்பைக் கழிவுகள், மலம் மற்றும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கிறதே, உங்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்குச் சென்று இவற்றையெல்லாம் பார்வையிடுவீர்களா, மாட்டீர்களா? எனக் கேட்டார். இந்த ஆய்வின்போது, அவருடன், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் சையத் மெஹமூத், வட்டாட்சியர் உதயகுமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கடேசன், மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் சம்சாத் பாரி இப்ராஹிம், பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன், வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாரி இப்ராஹிம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.