கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுாரைச் சேர்ந்தவர் பாபு, 55; அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 56; விவசாயிகளான இருவருக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்தது.கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், பிரகாஷ், பாபுவை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த பாபு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில், எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் இளமுருகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம் நேற்று தீர்ப்பளித்தார். அதில், பிரகாஷுக்கு 8 ஆண்டு சிறையும், 11 ஆயிரம் ரூபாய். அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். பிரகாஷ் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.