சகதியான சாலையில் மழைநீர் தேக்கம் அய்யன் திருவள்ளுவர் நகரினர் அவதி
காஞ்சிபுரத்தில் அய்யன் திருவள்ளுவர் நகரில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிகுப்பம் ஊராட்சி, அய்யன் திருவள்ளுவர் நகர், முருகேசனார் தெரு வழியாக ரமணா அவென்யூ, வேந்தன் நகர், குமரன் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த இந்த பிரதான சாலை, மண் சாலையாக இருப்பதால், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது. இதனால், மழைக்காலத்தில் சகதி சாலையாக மாறி, பள்ளத்தில் மழைநீர் தேங்குகிறது. இதனால், இச்சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியோர் நிலைதடுமாறி தவறி விழுந்து காயமடைகின்றனர். அதேபோல, இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, அய்யன் திருவள்ளுவர் நகர், முருகேசனார் தெருவிற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இதுகுறித்து ஒருங்கிணைந்த அய்யன் திருவள்ளுவர் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசனிடம் சாலை வசதி, மின்விளக்கு, பூங்கா அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.