பார்க்கிங் வசதியின்றி செயல்படும் விடுதிகள் தினமும் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பார்க்கிங் வசதியின்றி செயல்படும் விடுதிகள் தினமும் ஏற்படும் நெரிசலை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை

Update: 2024-12-20 11:29 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் நாட்டின் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில், உலகளந்த பெருமாள் உள்ளிட்ட கோவில்கள், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அருகருகே அமைந்துள்ளன.இக்கோவில்களை தரிசிக்க வரும் பக்தர்கள், காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ள தெருவில், வாடகைக்கு அறை எடுக்க விரும்புகின்றனர். இதை பயன்படுத்தி, அங்கு வசிப்போர் மாநகராட்சியின் உரிய அனுமதி பெறாமல், குடியிருப்பு கட்டடங்களை விடுதிகளாக மாற்றி, வணிக ரீதியில் வருவாய் ஈட்டுகின்றனர். இதுமட்டுமல்லாமல், பார்க்கிங் வசதியின்றி விடுதிகள் அதிக எண்ணிக்கையில் வந்துவிட்டதால், அங்கு தங்க வருவோர் தங்களது கார்களை, சாலையிலேயே விட்டு செல்கின்றனர். பார்க்கிங் வசதி இல்லாமல் விடுதிகள் அதிகரித்துவிட்டதால், அச்சாலை முழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விடுமுறை, பண்டிகை, முகூர்த்த நாட்களில், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது. காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெரு, உலகளந்த பெருமாள் கோவில் தெரு, பஞ்சுக்கொட்டி தெரு ஆகிய இடங்களில், பாதசாரிகள் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்படுகிறது. காமாட்சியம்மன் கோவிலை சுற்றி அதிகரித்து வரும் விடுதிகளை, மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, அனுமதி பெறாத விடுதிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News