மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் கடும் அவதி
காஞ்சிபுரத்தில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி
காஞ்சிபுரம் அடுத்த பரந்துார் கிராமத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 24 மணி நேரமும் பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலை 9:00 - மாலை 4:00 மணி வரையில் புறநோயாளிகளுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படுகின்றன. நேற்று காலை 9:45 மணிக்கு பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் யாரும் வரவில்லை. காய்ச்சலுக்காக சென்ற மூதாட்டி ஒருவர், சுகாதார வளாகத்திற்குள்ளேயே மயங்கி விழுந்தார். மேலும், பகல் 2:00 மணிக்கு மேல் எந்த ஒரு மருத்துவரும், சுகாதார நிலையத்திற்குள் இருப்பதில்லை என, நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய வட்டார மருத்துவ அலுவலரும் கண்டுகொள்வதில் என, நோயாளிகள் புலம்புகின்றனர். எனவே, தற்போது பெய்து வரும் வடகிழக்கு மழையால் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகளை சரி செய்வதற்கு, நாள் முழுவதும் மருத்துவர்கள் பணியில் இருக்க, சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.