கோவில் மனைக்கு வாடகை உயர்வு குடியிருப்போர் சங்கம் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில் மனைக்கு வாடகை உயர்வை கண்டித்து குடியிருப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், மாவட்டத்தில் கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின்போது நிர்ணயிக்கப்பட்ட வாடகையை, கடந்த 2016ல் ரத்து செய்யப்பட்டது.மேலும், வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து, 2016ம் ஆண்டுக்கு முன்பு இருந்த வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என, கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஆந்திரா, கர்நாடகா அரசுகளை போல், இனாம் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, இனாம் இடங்களில் வாழ்வோருக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலர் மூர்த்தி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ஏழுமலை, தங்கராஜ், ஜோதிலிங்கம் மற்றும் கோவில் மனையில் குடியிருப்போர் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையால் பொருளாதார ரீதியில் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி ஆர்ப்பாட்டத்தின் போது பேசினர். ஹிந்து அறநிலையத் துறை, வாடகையை குறைக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பினர்.