திருவண்ணாமலை : மாவட்ட திறன் குழுக் கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில், மாவட்ட திறன் குழுக் கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா். திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில், மாவட்ட திறன் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் தியாகராஜன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்வோருக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு குறுகிய கால பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய காலப் பயிற்சியை நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களைக் கொண்ட நிறுவனங்கள் வாயிலாக வழங்கலாம். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களில் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு, முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த வாய்ப்புகளை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில், திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.