பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பிய தாமல் ஏரியால் மகிழ்ச்சி

பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பிய தாமல் ஏரியால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Update: 2024-12-22 03:51 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் ஏரிகள் நிரம்பின. நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமலேயே இருந்தன.இதனால், விவசாயிகள் கவலையடைந்த நிலையில், பெஞ்சல் புயல் மற்றும் அடுத்து வந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் மழை பெய்தது. இதனால், மொத்த ஏரிகளில், 162 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மீதமுள்ள 122 ஏரிகள் 75 சதவீதமும், 58 ஏரிகள் 50 சதவீதமும், 38 ஏரிகள் 25 சதவீதமும், ஒரு ஏரி நிரம்பாமலும் உள்ளன. இதில், மணிமங்கலம், பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், தென்னேரி, உத்திரமேரூர் ஆகிய பெரிய ஏரிகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில், தாமல் ஏரியும் நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள தாமல் ஏரி, 18 அடி உயரமும், 2,307 ஏக்கர் பாசன பரப்பும் கொண்டதாக உள்ளது. ஏரி நிரம்பி மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் நீர்வரத்து அதிகமாகியுள்ளதால், தாமல் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது. ஏற்கனவே கம்ப கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் நிலையில், தாமல் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நவரை பருவத்தில் பயிர் செய்ய ஏதுவாக இருக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Similar News