தர்மபுரியில் பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

2023

Update: 2024-12-22 10:46 GMT
தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் கூட்டரங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநில பிரசார செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். மாநில பொது செயலாளர் நடராஜன், முன்னாள் மாநில தலைவர் தண்டபாணி, அரசு அலுவலர் ஒன்றிய தர்மபுரி மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் துரைப்பாண்டி சிறப்புரையாற்றி பேசினார். கூட்டத்தில், 2023&24ம் ஆண்டில் 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தியதற்கு தமிழக முதல்வருக்கும், தொழிலாளர்துறை அமைச்சருக்கும் அரசு செயலாளர் மற்றும் கூடுதல் இயக்குனருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தில், பயிற்சி பிரிவில் முதல்வர் பதவி உயர்வு வழங்குவதில் எந்தவிதமான மாற்றமும் கொண்டு வர கூடாது. மேலும் பதவிஉயர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவை ரத்து செய்ய வேண்டும். டிப்ளமோ படித்து 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கும் மண்டல பயிற்சி இயக்குநர் பதவி உயர்வு வழங்கும் வகையில் விதிகளை தளர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை 11 மாதங்களுக்கு ஒருமுறை பணி நீக்கம் செய்து மீண்டும் பணியமர்த்துவதை தவிர்த்து தொடர்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி துறையில் முதல்வர், பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர் பதவி உயர்வுகளை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கி பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பெண் அலுவலர்களுக்கு கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வகுப்பறைகளில் உடைந்த பெஞ்ச், மரச்சாமான்களை கழிவு செய்து புதிய பெஞ்சுகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், பட்டய பொறியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைலவர் ஜெகநாதன், மாநில பொருளாளர் மாதப்பன், முன்னாள் மாநில பொது செயலாளர் மாணிக்கம், அரசுஅலுவலர் ஒன்றியத்தின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் மணி, மாணிக்கம், குணசேகரன் மற்றும் முத்துசாமி, சரவணன், மாதேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News