விருத்தாசலம் அருகே தாயின் கண் முன்னே வெள்ளாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மகன்
தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்
விருத்தாசலம், டிச.23- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (40), விவசாயி. மனைவி சரஸ்வதி. இவரும் இவரது மகன்கள் சந்துரு (10), சித்தார்த் (6), ஆகிய இருவருடன் சரஸ்வதி குளிக்க சென்றார். அப்போது சந்துருவும் சித்தார்த்தும் ஓடி சென்று ஆற்றில் இறங்கினர். ஆற்றில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்ததாலும் ஆழம் அதிகமாக இருந்ததாலும் சந்துரு, சித்தார்த் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் சரஸ்வதி ஓடிச் சென்று ஆற்றில் இறங்கி சித்தார்த்தை மீட்டார். அதற்குள் தாயின் கண் முன்னே சந்துரு தண்ணீரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டான். தன் மகன் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை கண்டு தாய் கதறி அழ அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆற்றில் இறங்கி தேடினர் .ஆனால் நேற்று மதியத்தில் இருந்து நான்கு மணி நேரமாக தேடியும் இதுவரை சந்துரு கிடைக்கவில்லை. மேலும் தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாரும் சந்துருவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.