ஒரே நாடு ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும்
சேலத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி
இந்திய குடியரசு கட்சியின் சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியது கண்டனத்திற்குரியது. இது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். குறைந்தபட்ச அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் அமித்ஷா பேசி உள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை. இது அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் திட்டம். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் ஆகும். இதற்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி செலவாகும். என்ன தேவைக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.